பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 3-ம் தேதி மத்திய அமைச்சரவை கூடுகிறது?
பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 3-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், பிரதமர் மோடி ஜூலை 3 இல் மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மாநாட்டு மையத்தில் ஜூலை 3ஆம் தேதி அமைச்சரவைக்கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் முக்கிய கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சரவைக்கூட்டம் கூடுவது பற்றிய தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு மற்றும் 2024 நாடாளுமன்றத்தேர்தல் நெருங்குவதால் அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மாநிலம் மற்றும் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்ய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் மோடியுடனான கூட்டத்தில் இது குறித்து கூறியதாகக் கூறப்படுகிறது.