சூரத்கல் சுங்கச்சாவடி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்

சூரத்கல் சுங்கச்சாவடி பிரச்சினை விரைவில் தீர்வு காணப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரி எம்.கே.வதாரே தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-14 19:00 GMT

மங்களூரு;

ஆலோசனை கூட்டம்

தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டம் கலெக்டர் கே.வி.ராஜேந்திரா தலைமையில் நடைபெற்றது.

இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி எம்.கே.வதாரே உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் கலெக்டர் கே.வி.ராஜேந்திரா கூறியதாவது:-

கிரிமினல் வழக்கு

சூரத்கல் மற்றும் நந்தூர் இடையே உள்ள சாலை பள்ளங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படும். மாநகராட்சி கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சூரத்கல் முதல் என்.ஐ.டி.கே. சந்திப்பு வரையிலான சாலையை அடுத்த 7 நாட்களுக்குள் சீரமைக்க வேண்டும்.

நந்தூர் சந்திப்பில் இருந்து பி.சி.ரோடு வரை 14 கிலோமீட்டர் நீளத்திற்கு சர்வீஸ் ரோடு ரூ.19 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் சீரமைக்கப்படும் சர்வீஸ் ரோடுகளின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். கூளூர் மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும். வரும் பருவமழை காலத்தில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. பம்புவெல் முதல் தாளப்பாடி வரை உள்ள சாலை பள்ளங்களை உடனே மூட வேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் அரசின் ஒரு பகுதியாக நினைத்து பணியாற்ற வேண்டும். தங்களுக்கு பிரச்சினைகள் இருப்பின் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

சூரத்கல் சுங்கச்சாவடி பிரச்சினை

இதைதொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி எம்.கே.வதாரே கூறியதாவது:-

'சூரத்கல் சுங்கச்சாவடி, எஜமாடி சுங்கச்சாவடி 10 கி.மீ.க்குள் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி டிரைவர்கள் உள்ளிட்டோர் சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றும்படி கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். அதன்படி சூரத்கல் சுங்கச்சாவடி பிரச்சினைக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்