தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்... பெற்றோர் எடுத்த விபரீத முடிவு

ஜிதேந்திராவின் கையில் கத்தியால் வெட்டிய அடையாளமும் இருந்துள்ளது.

Update: 2024-01-29 03:33 GMT

குவாலியர்,

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ளது சிரோலி நகரம். இங்குள்ள குராவலி காலனியில் வசித்தவர் ஜிதேந்திரா ஜா (வயது 50) கட்டிட மேஸ்திரி. இவரின் மனைவி திரிவேணி (வயது 40) அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களின் மகன் அக்சல் ஜா (வயது 17) 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் இருந்து இவர்கள் யாரும் வெளியில் நடமாடவில்லை என்று தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று பகலில் போலீசார் வந்து கதவை திறந்து பார்த்தபோது உள்ளே அவர்கள் 3 பேரும் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தனர்.

ஜிதேந்திராவின் கையில் கத்தியால் வெட்டிய அடையாளமும் இருந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், அக்சல் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது. அதில், ஒரு நபர் அக்சலுக்கு தீவிர மன அழுத்தம் கொடுத்து வந்ததால் இந்த முடிவை எடுத்து கொண்டதாக அவர் எழுதி இருந்தார். மேலும் மன அழுத்தம் கொடுத்த நபரின் பெயரையும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

முதலில் அக்சல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் இதனால் மனம் உடைந்த பெற்றோரும் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். குடும்பத்தையே தற்கொலைக்கு தூண்டிய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்