சந்திரயான்-3: நிலவில் சல்பர் இருப்பதை மீண்டும் உறுதி செய்த ரோவர்..!
நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை மீண்டும் மற்றொரு கருவி மூலம் பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது.;
பெங்களூரு,
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான் - 3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நிலவின் தென் துருவத்தில் கனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவி, நிலவின் தென் துருவத்தில் சல்பர் தனிமம் இருப்பதை உறுதி செய்துள்ளது என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை மீண்டும் மற்றொரு கருவி மூலம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், "ரோவரில் உள்ள மற்றொரு கருவி, இப்பகுதியில் சல்பர் இருப்பதை மற்றொரு நுட்பத்தின் மூலம் உறுதிப்படுத்துகிறது.
ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) சல்பர் மற்றும் பிற சிறிய தனிமங்களை கண்டறிந்துள்ளது. சந்திரயான் - 3ன் இந்த கண்டுபிடிப்பு, அப்பகுதியில் உள்ள சல்பரின் மூலத்திற்கான புதிய விளக்கங்களை உருவாக்க விஞ்ஞானிகளை கட்டாயப்படுத்துகிறது: இயல்பாக உள்ளதா?, எரிமலையா?, விண்கல்லா?,......?" என்று தெரிவித்து உள்ளது.