தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது; கிராம மக்கள் மகிழ்ச்சி

தாவணகெரே அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-08-11 14:57 GMT

சிவமொக்கா;

சிறுத்தை அட்டகாசம்

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா சாஸ்வேஹள்ளி அருகே பைரனள்ளி, கியாசினகெரே, ஹட்டிஹால் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இதனால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவுநேரத்தில் இரைதேடி ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்து வருகிறது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று பைரனள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்தது.

இதனால் கிராம மக்கள், வனத்துறையினரிடம் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் பைரனள்ளி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில் இரும்புகூண்டு வைத்தனர். மேலும் அதில் சிறுத்தைக்கு இரையாக மாமிசம் வைத்தனர்.

கூண்டில் சிக்கியது

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து இரைதேடி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது. இதையறிந்த கிராம மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் கூண்டுடன் சிறுத்தையை பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். பிடிபட்ட சிறுத்தையை, சிவமொக்கா நகரை ஒட்டிய தாவரேகொப்பா வனஉயிரியல் பூங்காவில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்