ஆபாச வீடியோவால் மராட்டிய அரசியலில் பரபரப்பு... விசாரணை வேண்டும் என கிரித் சோமையா கோரிக்கை

மராட்டிய பா.ஜ.க. துணை தலைவரின் ஆபாச வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், இதுபற்றி விசாரணை வேண்டும் என பட்னாவிசுக்கு கிரித் சோமையா கோரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2023-07-18 14:05 GMT

புனே,

மராட்டிய பா.ஜ.க. துணை தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி.யான கிரித் சோமையாவின் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று மராத்தி சேனலான லோக்சாஹியில் வெளிவந்து மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த சர்ச்சை பற்றி சோமையா வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், செய்தி சேனல் ஒன்றில் வீடியோ பதிவு ஒன்று வெளிவந்தது. அதில் பல பெண்களை துன்புறுத்தினேன் என்றும், பல வீடியோ பதிவுகள் உள்ளன என்றும் எனக்கு எதிராக புகார்கள் வந்து உள்ளன என்று தெரிவித்து உள்ளார்.

எந்தவொரு பெண்ணிடமும் தகாத முறையில் நான் நடந்து கொள்ளவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் பற்றி மராட்டிய துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் விசாரிக்க வேண்டும்.

வீடியோவின் நம்பக தன்மை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.வான அவர் 2 முறை எம்.பி.யாக இருந்து உள்ளார். மராட்டிய பா.ஜ.க.வின் துணை தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. யஷோமதி தாக்குர் கூறும்போது, ஆளும் கூட்டணியின் இயற்பண்பு மற்றும் உண்மை முகம் இன்று வெளிப்பட்டு உள்ளது.

சோமையா பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை மிரட்டி உள்ளார். அது மட்டுமின்றி நிறைய பெண்களும் மிரட்டப்பட்டு உள்ளனர். 8 மணிநேர வீடியோ பதிவு வெளிவந்து உள்ளது என எனக்கு தெரிய வந்து உள்ளது.

இந்த வீடியோ பதிவால், எத்தனை பெண்கள் துன்புறுத்தப்பட்டனர் மற்றும் சித்ரவதை செய்யப்பட்டு உள்ளனர் என என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

பா.ஜ.க. தலைவர்கள் ஒழுக்கம் பற்றி அடிக்கடி பேசி வரும் நிலையில், இதற்கு கிரித் சோமையாவை பொறுப்பேற்க செய்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தைரியம் இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. அதிரடி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இதேபோன்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியும் சோமையா மற்றும் ஆளும் கூட்டணியை கடுமையாக விமர்சித்து உள்ளது.

அக்கட்சியை சேர்ந்த எம்.பி.யான சஞ்சய் ராவத் டுவிட்டரில், இன்னும் நிறைய நடக்கும். என்ன நடக்கிறது என பார்ப்போம். ஜெய் மராட்டியம்! என பதிவிட்டு உள்ளார். இரு கட்சிகளும் பல வீடியோ பதிவுகள் உள்ளன என குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்