கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை செத்தது
குஷால்நகர் அருகே கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று செத்தது.
குடகு-
குஷால்நகர் அருகே கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று செத்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுத்தை செத்துக்கிடந்த காபித்தோட்டத்தின் உரிமையாளரிடம் விசாரித்து வருகிறார்கள்.
சிறுத்தை செத்து கிடந்தது
குடகு மாவட்டம் குஷால் நகர் தாலுகா குட்டேஹொசூரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது பொல்லூரு கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் டிசோசா, சிவராம், கோபால் ஆகியோர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குட்டேஹொசூரு அருகே ஹாரங்கி சாலையில் ஒரு காபித்தோட்டத்தின் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று செத்துக்கிடந்தது.
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உடனடியாக சென்று அந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் இதுபற்றி கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்து அவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.
வனத்துறையினர் விசாரணை
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை டாக்டர் அதே இடத்தில் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அந்த சிறுத்தைக்கு 4 வயது இருக்கும் என்றும், அது ஆண் சிறுத்தை என்றும் அவர் தெரிவித்தார். காபித்தோட்டத்திற்குள் வனவிலங்குகள் புகாமல் இருப்பதற்காக அங்கு சட்டவிரோதமாக கம்பி வேலி அமைத்துள்ளனர். அதில் சிக்கி அந்த சிறுத்தை செத்திருந்தது வனத்துறையினருக்கு தெரியவந்தது.
பின்னர் வனப்பகுதியில் குழிதோண்டி அந்த சிறுத்தையின் உடலை வனத்துறையினர் புதைத்தனர். இந்த சம்பவம் குறித்து மடிகேரி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுத்தை செத்துக்கிடந்த காபித்தோட்டத்தின் உரிமையாளரிடம் விசாரித்து வருகிறார்கள்.