பாதிக்கப்பட்ட ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்க்கண்ட் அரசு

பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-03-05 06:02 GMT

ராஞ்சி,

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதற்காக இருசக்கர வாகனத்தில் ஜார்க்கண்ட் வந்த அவர்கள், அதன் பின்னர் நேபாளம் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள ஹன்ஸ்திஹா காவல் நிலையப் பகுதியில் இரவு நேரத்தை கழிக்க நினைத்த அவர்கள், இதற்காக அப்பகுதியில் ஒரு தற்காலிக கூடாரம் அமைத்து தங்கினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல், வெளிநாட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரையும் அவர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

மேலும், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என ஜார்க்கண்ட் டி.ஜி.பி. அஜய் குமார் சிங் தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் வன்கொடுமை சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு இழப்பீடாக ஜார்க்கண்ட் அரசு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது. இந்த இழப்பீட்டை துணை காவல் ஆணையர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு வழங்கினார். இது நடந்த சம்பவத்தைவிடவும் கீழானது என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்