7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் - மின்கசிவே காரணம்?

டெல்லி ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பலியாகினர்.;

Update: 2024-05-27 14:02 GMT

புதுடெல்லி,

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த ஆஸ்பத்திரி 2 தளங்களை கொண்ட கட்டிடத்தில் இயங்கி வந்தது. இங்கு புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் உள்பட ஏராளமான குழந்தைகள் சிகிச்சையில் இருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் ஆஸ்பத்திரியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ சற்று நேரத்துக்குள் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து, அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் ஆஸ்பத்திரிக்குள் சிக்கிய குழந்தைகளை மீட்க துரிதமாக செயல்பட்டனர்.

இருப்பினும் இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் தீக்காயம் அடைந்த 5 பச்சிளம் குழந்தைகள் அருகில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக குழந்தைகள் நல ஆஸ்பத்திரியின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 7 பச்சிளம் குழந்தைகள் பலியாகின சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், டெல்லி ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்திற்கு மின்கசிவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. எமர்ஜென்சி எக்ஸிட் இல்லாததும் ஒரு காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்தின் வீடியோக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் மூலம் கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்றும் அதை வைத்து அடுத்துக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்