மைசூரு அரண்மனையில் கோட்டை சுவர் இடிந்து விழுந்தது
தொடர் கனமழை காரணமாக மைசூரு அரண்மனையில் கோட்டை சுவர் இடிந்து விழுந்தது.
மைசூரு:
தொடர் கனமழை
கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதேபோல், மைசூருவில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது.
விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகி உள்ளன. மைசூரு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை சுவர் இடிந்தது
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக மைசூரு அரண்மனையில் கோட்டை சுவர் இடிந்து விழுந்துள்ளது. அரண்மனையின் வடக்கு திசையில் சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் இடத்தின் அருகே, அதாவது கோட்டை மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் சுவர் இடிந்து சில பாகம் விழுந்துள்ளது. நூற்றாண்டுக்கு மேலாக பழமை வாய்ந்த கோட்டை சுவர் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, இடிந்து விழுந்த பகுதி தார்பாயால் மூடி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மழை நின்றதும் பழுது பார்க்கும் பணி நடக்கும் என்று அரண்மனை மண்டலி இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தற்போது இடிந்து விழுந்துள்ள கோட்டை சுவரில் ஏற்கனவே விரிசல் விழுந்திருந்தது. தசரா சமயத்தில் அங்கு வைத்து தான் யானைகள், குதிரைகளுக்கு பீரங்கி குண்டு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், சுவரில் விரிசல் ஏற்பட்டிருந்ததால், அங்கு பீரங்கி குண்டு பயிற்சி அளிக்கப்படவில்லை.