5 மாநில தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!

5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்கிறது.

Update: 2023-10-09 02:59 GMT

புதுடெல்லி,

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆலோசனையில் இருந்து வரும் நிலையில் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. மற்ற மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு 5 மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.

இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் தேர்தல் கமிஷன் சார்பில் ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து காவல் மற்றும் பொது-செலவின தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான வியூகங்களை வகுக்க தேர்தல் ஆணைய முடிவு செய்தது.

இந்த நிலையில், தெலங்கானா, மிசோரம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்கிறது. டெல்லியில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட உள்ளார்.

மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரசும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்