திருப்பதி மலைப்பாதையில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த முடிவு..!

திருப்பதி மலைப்பாதையில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-13 07:26 GMT

திருப்பதி,

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் மலைப்பாதை வழியாக வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

அலிப்பிரியில் இருந்து திருமலைக்குச் செல்லும் வாகனங்களின் நேரம் குறிக்கப்பட்டு 45 நிமிட நேரத்தில் மட்டுமே வாகனங்கள் திருமலைக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மலைப்பாதையில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதால் நேரம் குறிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

வாகனங்கள் சரியாக 45 நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் மலைப்பாதையில் அடிக்கடி சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து விடுகின்றன. இதனால் வாகனங்கள் மற்றும் வனவிலங்குகளை கண்காணிக்க மலைப்பாதையில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதன்படி அலிப்பிரியிலிருந்து திருமலைக்கு வரும் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5 கேமராக்கள் வீதம் 90 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் மலைப்பாதையில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு 60 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மலை வளைவுகள் மற்றும் அதிக தூரம் கவரக்கூடிய வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு மலைப்பாதைகளில் வாகன விபத்து ஏற்பட்டாலோ அல்லது வனவிலங்குகள் புகுந்தாலோ உடனடியாக போலீசார் மற்றும் ஆக்டோபஸ் அதிரடிப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்து மீட்பு பணியில் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே திருமலை முழுவதும் 1,679 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்