சாலை பள்ளத்தால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலுடன் பசவராஜ் பொம்மையிடம் நியாயம் கேட்ட தம்பதி
ஹாவேரி அருகே சாலை பள்ளத்தால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் தம்பதி நியாயம் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஹாவேரி:
பச்சிளம் குழந்தை பலியானது
ஹாவேரி மாவட்டம் கானேகல்லு தாலுகா கிரேபாசூரு கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவரது மனைவி பூர்ணிமா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூர்ணிமாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. ஓரிரு நாட்கள் கழித்து ஆஸ்பத்திரியில் இருந்து பூர்ணிமா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் குழந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே பசவராஜ் தனது மனைவி, குழந்தையை காரில் அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் சாலைகள் பள்ளமாக இருந்தது. இதன்காரணமாக டிரைவரால் காரை வேகமாக ஓட்ட முடியாமல் போனது. அதேநேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் முன்பாகவே காரிலேயே குழந்தை உயிரிழந்தது. இதனால் குழந்தையை பார்த்து பசவராஜ், பூர்ணிமா கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.
முதல்-மந்திரியிடம் நியாயம் கேட்டனர்
இதற்கிடையில், ஹாவேரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பது தம்பதிக்கு தெரிந்தது. உடனே உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலுடன் பசவராஜ், அவரது மனைவி பூர்ணிமா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இருந்த பகுதிக்கு சென்றார்கள். அங்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து தங்களது குழந்தையின் உடலை காண்பித்து முதல்-மந்திரியிடம் தம்பதி நியாயம் கேட்டனர்.
அதாவது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வீட்டுக்கு செல்லும்படி கூறினார். வீட்டுக்கு வந்த மறுநாளே குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தைக்கு பாதிப்பு ஏதேனும் இருந்தது பற்றி டாக்டர் தெரிவிக்கவில்லை. குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது சாலை பள்ளங்களால் வேகமாக செல்ல முடியாமல் போனது. இதனால் எங்களது குழந்தை இறந்துவிட்டதாக கூறி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் அந்த தம்பதி கூறினார்கள்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
தங்களது குழந்தை பலியாகி இருப்பதால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரியிடம் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் இதுபற்றி விசாரணை நடத்தும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்வதாகவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, அந்த தம்பதியிடம் உறுதி அளித்தார். இதையடுத்து, குழந்தையின் உடலுடன் அந்த தம்பதி புறப்பட்டு சென்றனர்.