ராணுவத்தில் சமரசம் வேண்டாம்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
அக்னிபத் திட்டம் நமது ஆயுதப்படைகளின் செயல்பாட்டு திறனை குறைக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
முப்படைகளில் வீரர்கள் சேர்ப்பில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 'அக்னி பாதை' என்ற இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் பணி செய்யும் வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது;-
"இந்தியா இரண்டு முனைகளில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது, அழைக்கப்படாத அக்னிபத் திட்டம் நமது ஆயுதப்படைகளின் செயல்பாட்டு திறனை குறைக்கிறது. நமது படைகளின் கண்னியம் மரபுகள், வீரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பாஜக அரசு நிறுத்த வேண்டும்" என்றார்.
'அக்னிபாதை' திட்டம் என்றால் என்ன?
நாட்டை பாதுகாக்கும் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளில் வீரர்கள் சேர்ப்பில் மத்திய அரசு அதிரடி மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த அதிரடி மாற்றம், முப்படை வீரர்களுக்கான செலவினத்தை குறைப்பதோடு மட்டுமின்றி, வேலையில்லாமல் இருக்கிற இளைய தலைமுறையினருக்கு முப்படைகளிலும் பணியாற்றும் குறுகிய கால வாய்ப்பினையும் ஏற்படுத்துகிறது. இதற்கான அறிவிப்பை தலைநகர் டெல்லியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் மனோஜ் பாண்டே (ராணுவம்), வி.ஆர். சவுத்ரி (விமானப்படை), ஆர்.ஹரிகுமார் (கடற்படை) ஆகியோருடன் நிருபர்களிடம் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் ஆயுதப்படைகளை வலிமை மிக்கவை ஆக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய ஆயுதப்படைகளை உலகிலேயே சிறந்தவையாக மாற்றுவதற்கு, ஆள் சேர்ப்பில் அக்னிபாத் (அக்னிபாதை) என்ற திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு பாதுகாப்பு துறைக்கான மத்திய மந்திரிகள்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அக்னிபாத் ஆள் சேர்ப்பு திட்டம், ஆயுதப்படைகளுக்கு இளமைத்தன்மையை வழங்கும் மாற்றத்துக்கான ஒரு முயற்சி ஆகும்.
மேலும், இது வேலைவாய்ப்பினை அதிகரிக்கும். இந்த திட்டத்தின்கீழ் சேருவோர், புதிய தொழில்நுட்பங்களுக்காக எளிதில் பயிற்சி பெற முடியும். அவர்களது ஆரோக்கியமும், உடல் தகுதியும் சிறப்பாக இருக்கும்.ஆயுதப்படைகளுக்கு ஆள் சேர்ப்பு திட்டத்தில் கொண்டு வரப்படுகிற புரட்சிகரமான மாற்றங்கள், ஆரம்பத்தில் 4 ஆண்டு காலத்துக்கு வீரர்களை சேர்க்க வகை செய்கிறது. அவர்களில் சிலர், தக்கவைக்கப்படுவார்கள்.
சம்பளம் எவ்வளவு?
அக்னிபாத் திட்டத்தின்கீழ், இந்திய இளைஞர்கள் ஆயுதப்படைகளில் அக்னி வீரராக பணியாற்றுகிற வாய்ப்பினை இந்த திட்டம் வழங்கும்.அக்னிபாத் திட்டத்தில் ஆயுதப்படைகளில் சேருகிற வீரர்கள் முதல் ஆண்டில் மாதம்தோறும் ரூ.30 ஆயிரமும், இரண்டாவது ஆண்டில் ரூ.33 ஆயிரமும், மூன்றாவது ஆண்டில் ரூ.36 ஆயிரத்து 500-ம், நான்காம் ஆண்டில் ரூ.40 ஆயிரமும் சம்பளமாக பெறுவார்கள்.4 ஆண்டு பணிக்காலம் முடிந்து, வெளியேறுகிறபோது வீரர்கள் ஒருமுறை நிதி உதவியாக ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் பெறுவார்கள். இந்த சேவா நிதிக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும். ஆனால் பணிக்கொடை, பென்ஷன் போன்றவை கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த அக்னிபாத் திட்டத்தில் ஆயுதப்படைகளில் சேரும் வீரர்களுக்கு அவர்களது பணிக்காலத்தில் ரூ.48 லட்சத்துக்கு (சந்தா பங்களிப்பு இன்றி) ஆயுள் காப்பீடு வசதி உண்டு.
25 சதவீதத்தினர் பணி நிரந்தரம்
அக்னி வீரர்களுக்கு பல்வேறு ராணுவ திறன்கள், அனுபவம், ஒழுக்கம், உடல் தகுதி, தலைமைத்துவ பண்புகள், தைரியம், நாட்டுப்பற்று ஆகியவை ஏற்படுத்தித்தரப்படும்.4 ஆண்டு பணிக்கு பின்னர் ஆயுதப்படைகளில் தொடர்ந்து பணி செய்ய தேர்வு செய்யப்படுவோர் குறைந்தது, 15 ஆண்டுகள் பணி செய்ய வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு தற்போதுள்ள பணி விதிமுறைகள், பணி நிபந்தனைகள் பொருந்தும். 'அக்னிபாத்' திட்டத்தில் முப்படைகளில் சேரும் வீரர்களில் 25 சதவீதத்தினர் பணி நிரந்தரத்துக்கான வாய்ப்பினை பெறுவார்கள்.இந்த 'அக்னிபாத்' திட்டத்தை முப்படை தளபதிகளும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.