சமூக ஊடகம் வழியே பயங்கரவாத பிரசாரம்; ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் பற்றி என்.ஐ.ஏ. தகவல்

கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் சமூக ஊடகம் வழியே பயங்கரவாத பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-08-07 10:41 GMT



புதுடெல்லி,



நாடு முழுவதும் 75-வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், டெல்லி பட்லா ஹவுஸ் பகுதியில் மொஹ்சின் அகமது என்பவரின் குடியிருப்பு வளாகத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை அதிகாரிகள் கைது செய்தனர். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் அவர் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் மொஹ்சின் அகமது, சமூக ஊடகம் வழியே, பயங்கரவாதத்திற்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதுடன், இளைஞர்களை தவறாக வழி நடத்தும் எண்ணத்துடன் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்டி, அதனை சிரியா மற்றும் பிற நாடுகளுக்கு கிரிப்டோகரன்சி வடிவில் அனுப்பியுள்ளார். இதன் வழியே ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பாடுகளை தீவிரப்படுத்த முயன்றுள்ளார். தனது தொழில்நுட்ப அறிவால், புலனாய்வு அமைப்புகளிடம் சிக்காமல் அவர் தப்பி வந்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் விசாரணையில் உள்ள அகமது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்தது எப்போது மற்றும் அவரது கூட்டாளிகள் எல்லாம் யார் என்றும் தெரிந்து கொள்வதற்கான கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த மொஹிசினை 7 நாட்கள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்