ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; கோழைத்தனமான செயல் - ஜனாதிபதி கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமான செயல் என ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில், நேற்று ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமான செயலாகும் என ஜனாதிபதி திரவுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமான செயலாகும். இது மிகவும் கண்டனத்திற்குரியது.
பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும் நடந்து வரும் இந்த போரில் உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.