டெல்லியில் வெப்பநிலை கணிசமாக குறையும் - வானிலை ஆய்வுமையம்

டெல்லியில் வெப்பநிலை கணிசமாக குறையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-30 22:26 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. சராசரியாக தினமும் 100 டிகிரிக்கும் குறையாத அளவுக்கு அக்னி வெயில் சுட்டெரித்தது. இடை இடையே சில நாட்கள் 105 முதல் 110 டிகிரி வரைக்கும் வெயில் எகிறியது. இதனால் இரவுப்பொழுதும் கதகதக்கிற அனலின் நடுவே கடந்து சென்றது. மின்விசிறிகள் வெப்பத்தை வாரி இறைத்ததால், மக்கள் சரியான தூக்கமின்றி தவித்தனர். குளிர்சாதனங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் ஜூன் 30-ந் தேதி தென்மேற்கு பருவமழை டெல்லியில் தொடங்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்தது. அதன்படி நேற்று காலைப்பொழுது மேகமூட்டத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேரம் ஆக ஆக வானில் கருமேகம் திரண்டு மழை பெய்தது. தொடக்கத்தில் லேசாக பெய்த மழை, நேரம் செல்லச் செல்ல கனமழையாக மாறியது. நகரம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

வழக்கமாக டெல்லியில் ஜூன் 27-ந் தேதி பருவமழை தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டு ஜூலை 15-க்கு பிறகே தொடங்கியது. இந்த ஆண்டு 2 நாட்கள் பிந்தினாலும் முதல்நாளிலேயே கனமழை பெய்து, கோடை வெப்பத்தால் தவித்த மக்களை ஆறுதல்படுத்திவிட்டது.

டெல்லி மட்டும் அல்லாது பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களிலும் நேற்று மழை பெய்தது. மழை பெய்யத் தொடங்கியதால் இனிமேல் டெல்லியில் வெப்பநிலை கணிசமாக குறையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்