தோல்வியை ஒருபாடமாக ஏற்றுக்கொண்டு, மீண்டும் எழுச்சியுடன் வருவோம் - கே.டி.ராமாராவ்

தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிஆர்எஸ் தலைவர் கே.டி.ராமாராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-03 10:57 GMT

ஐதராபாத்,

தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றிற்கு ஒரே கட்டமாக நவம்பர் 30 -ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 2,290 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 221 பேர் பெண்கள், ஒருவர் 3-ம் பாலினத்தை சேர்ந்தவர். மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள். இதில், ஆண்கள் 1.62கோடி பேரும், பெண்கள் 1.63 கோடி பேரும், 3-ம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 2,676 பேரும் ஆவர். இம்முறை புதிதாக வாக்களிப்பவர்கள், அதாவது, 18-19 வயதினர் மட்டும் 9.99 லட்சம் பேர்.

வாக்குப்பதிவுக்காக மொத்தம் 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பதற்றமானதாக கண்டறியப்பட்ட 4 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார், ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 75 ஆயிரம் போலீஸாரும், 375 கம்பெனி துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 71.34% வாக்குகள் பதிவாகின.

இந்த மாநிலத்தில் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவியது. அங்கு கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியது.

தெலுங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும் சிறுபான்மையினர் நலனுக்கான பட்ஜெட் தொகை ரூ.4,000 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும் என்றும் ஆறு மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி என்று கணித்த நிலையில் அதுவே மெய்ப்பட ,அங்கே காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் தொண்டர்கள் இனிப்புகளைப் பரிமாறியும், நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. அதேவேளையில், ஆளும் பிஆர்எஸ் கட்சி 40 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. பிற கட்சிகள் 3 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்தநிலையில், தெலுங்கானாவில் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி, தொடர்ந்து 2 முறை ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி என அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார்.

இந்த தோல்வியை ஒருபாடமாக ஏற்றுக்கொண்டு, மீண்டும் எழுச்சியுடன் வருவோம் எனவும், ஆட்சியமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்