தெலுங்கானாவில் வெள்ள பாதிப்பு; ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலுங்கானாவில் இன்றும், நாளையும் ஐதராபாத் மற்றும் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Update: 2024-09-02 07:50 GMT

ஐதராபாத்,

தெலுங்கானாவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையை தொடர்ந்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ரெயில், வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளது. தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மொத்தம் 15 பேர் பலியாகி உள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கானோரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களுக்கு கொண்டு சென்றனர். கனமழை மற்றும் வெள்ளம் தொடர்ச்சியாக, பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், பல ரெயில்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டும் உள்ளன.

கனமழையால், தெலுங்கானாவின் கேசமுத்ரம் மற்றும் மகபூபாபாத் இடையேயான ரெயில்வே தண்டவாளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பற்றி முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்து கொண்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும் பாதிப்புகளை தடுத்ததற்காக அரசின் முயற்சிகளுக்கு தன்னுடைய பாராட்டுதல்களையும் அவர் தெரிவித்து கொண்டார். இந்த சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம், தெலுங்கானா முழுவதும் புதிதாக எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, இன்றும், நாளையும் ஐதராபாத் மற்றும் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதுதவிர, 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் பலத்த காற்று வீச கூடிய சாத்தியமும் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்