நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் தேஜஸ்வி யாதவ் ஆஜர்

இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவிடம் நேற்று ஏறக்குறைய 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-01-30 07:55 GMT

புதுடெல்லி,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் 'குரூப் டி' பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர்.

2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில்,  லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. முன்னதாக இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவை அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனையடுத்து, லாலு பிரசாத் மற்றும் அவரது மகனுக்கும் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அதன்படி லாலு பிரசாத் கடந்த டிசம்பர் 29-ம் தேதியும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் கடந்த டிசம்பர் 30-ம் தேதியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது.

இதை தொடர்ந்து, நில மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை இயக்குனரகம் முன்பு நேற்று ஆஜரானார். பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தனது மகள் மிசா பாரதியுடன் காலை 11.05 மணிக்கு லாலு பிரசாத் யாதவ் சென்றார். ஏறக்குறைய 10 மணிநேரம் விசாரணைக்கு பின்னர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து லாலு பிரசாத் நேற்று இரவு பாட்னா நகரில் உள்ள தன்னுடைய இல்லத்திற்கு திரும்பினார்.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவை தொடர்ந்து அவரது மகனும், பிகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அப்போது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரும், ஏராளமான தொண்டர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு முன்பு குவிந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்