டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் மீது இரவிலும் கண்ணீர் புகை குண்டு வீச்சு
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தால், நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடாளுமன்றம் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேல் நீடித்த போராட்டத்தின் இறுதியில் வேளாண் சட்டங்களை 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதே சமயத்தில் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய மந்திரிகள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல் ஆகியோருடன் விவசாய சங்கங்கள் 2 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால் அவற்றில் உடன்பாடு ஏற்படவில்லை.
எனவே, பிப்ரவரி 13-ந்தேதி, டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லிக்கு படையெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு போராட்டத்தை போல், பெரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று போலீசார் கருதினர். எனவே, போராட்டத்தை முறியடிக்க டெல்லி போலீசாரும், அரியானா மாநில அரசும் 144 தடை உத்தரவு பிறப்பித்தன. 5 பேருக்கு மேல் கூடுவதற்கும், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. டெல்லி எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள், கொக்கி வேலிகள் ஆகியவை அமைக்கப்பட்டன.
கன்டெய்னர்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. வாகனங்களின் டயர்களை பஞ்சர் ஆக்குவதற்காக சாலைகளில் ஆணிகள் பொருத்தப்பட்டன. இதுபோல், அரியானா மாநில பா.ஜனதா அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. பஞ்சாபை ஒட்டிய அம்பாலா அருகில் உள்ள ஷாம்பு எல்லையில் ஏராளமான தடுப்புகளை அமைத்தது. ஜிண்ட், பதேஹாபாத், குருஷேத்ரா, சிர்சா ஆகிய இடங்களிலும் எல்லைகளை பலப்படுத்தினர். மாவட்டங்களில் 64 கம்பெனி துணை ராணுவப்படைகளும், 50 கம்பெனி அரியானா போலீசும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
காக்கர் ஆற்றுப்படுகை வழியாக டிராக்டர்கள் வருவதை தடுக்க ஆற்றுப்படுகையில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஷாம்பு எல்லையில் கலவர தடுப்பு வாகனங்கள், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவையும் நிறுத்தி வைக்கப்பட்டன. டிரோன்கள் மூலமாகவும் போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் திட்டமிட்டபடி நேற்று காலை 10 மணிக்கு பஞ்சாப் மாநிலம் பதேகார் சாகிப்பில் இருந்து விவசாயிகள் புறப்பட்டனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏராளமான டிராக்டர்களில் ஷாம்பு எல்லை வழியாக செல்ல அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி டிராக்டர்கள் டெல்லி நோக்கி படையெடுக்க தொடங்கின.
டிராக்டர்களுடன் இணைக்கப்பட்ட டிராலிகளில் முதியோர், பெண்களும் அமர்ந்து இருந்தனர். தடுப்புகளை உடைப்பதற்காக ஒரு விவசாயி, பொக்லைன் எந்திரத்தை ஓட்டிச்சென்றார். அங்கிருந்து 40 கி.மீ. தூரம் தாண்டி ஷாம்பு எல்லை உள்ளது. ஷாம்பு எல்லையை நெருங்கியவுடன், அங்கு குவிக்கப்பட்டிருந்த அரியானா மாநில போலீசார், விவசாயிகளை திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர்.
அதை மீறி விவசாயிகள் டிராக்டர்களுடன் முன்னேறி வந்தனர். போலீசாரை நோக்கி கற்களையும் வீசினர். சில இளம் விவசாயிகள், கான்கிரீட் தடுப்புகளை அகற்ற முயன்றனர். வேறு சில விவசாயிகள், இரும்பு தடுப்பு ஒன்றை அகற்றி, காக்கர் ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே வீசினர்.
நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அரியானா போலீசார், விவசாயிகளை நோக்கி கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். 2 இடங்களில் பல ரவுண்டுகள் வீசினர். அதனால் ஏற்பட்ட கண் எரிச்சலையும், இருமலையும் பொருட்படுத்தாமல் பல விவசாயிகள் முன்னேறி வந்தனர். கண்ணீர்புகையின் தாக்கத்தை தவிர்க்க சாக்குப்பையால் முகத்தை மூடிக்கொண்டனர்.
பின்னர், ஒரு டிரோன் மூலமாகவும் போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசினர். முன்னேறி வந்த விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஒரு மணி நேர களேபரத்துக்கு பிறகு, தடுப்புகளுக்கு அருகே விவசாயிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது மீண்டும் போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். சில விவசாயிகள், பக்கத்து வயலில் இறங்கி செல்ல முயன்றபோது, அவர்கள் மீதும் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.
கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற விவசாய அமைப்பின் பொதுச்செயலாளர் சர்வான் சிங் பந்தர், அரியானா மாநில அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-
அரியானாவை ஆளும் மனோகர்லால் கட்டார் அரசு, விவசாயிகளை துன்புறுத்தி வருகிறது. பஞ்சாப்-அரியானா மாநில எல்லை சர்வதேச எல்லைபோல் மாற்றி விட்டது. அரியானா மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்கு போல் மாற்றப்பட்டுள்ளது. அரசுடன் மோத நாங்கள் விரும்பவில்லை. அமைதியாக போராட்டம் நடத்தவே விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல், டெல்லி எல்லைகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. எல்லைகளில் மட்டுமின்றி, மத்திய டெல்லியின் முக்கிய சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தால், நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடாளுமன்றம் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. கட்டிடத்தை சுற்றிலும் துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகள் மெட்ரோ ரெயில்கள் மூலம் வந்து விடுவார்கள் என்று அஞ்சப்படுவதால், நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களை ஒட்டிய மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயில் மூடப்பட்டுள்ளன. செங்கோட்டை செல்லும் வெளிவட்ட சாலையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டெல்லி எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், அங்கு பயணிகளின் வாகனங்கள் குவிந்தன. தடுப்புகளுக்கிடையே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால், ஒரே நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடிந்தது. அதனால் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து சென்றன.
விவசாயிகள் டெல்லிக்குள் வந்தால் கைது செய்து அடைக்க டெல்லி பவானா மைதானத்தை தற்காலிக சிறையாக மாற்றுமாறு டெல்லி அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், அதை டெல்லி அரசு ஏற்க மறுத்து விட்டது.
விவசாயிகள் மீது இரவிலும் கண்ணீர் புகை குண்டுவீச்சு
இத்தகைய சூழலில், நள்ளிரவு நேரத்திலும் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். தொடர்ந்து முன்னேறி வந்த விவசாயிகளை தற்போது பஞ்சாப்- அரியானாவின் ஷம்பு எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து, விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும், ஷம்பு எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.