மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து பேசினார். செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
புதுடெல்லி,
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்தார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்த அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக கவர்னர் தெரிவித்தார். அதேவேளையில், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வக்கீலிடம் (அட்டர்னி ஜெனரல்) கருத்தை கேட்டு அடுத்தகட்ட முடிவை எடுக்க உள்ளதாக கவர்னர் கூறினார். இதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான கருத்து மோதல் உள்ளிட்டவை குறித்து கவர்னர் விவாதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்தும், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், இந்த விவகாரத்தில் தனக்கு இருந்து வரும் அதிகாரம் உள்ளிட்டவை குறித்தும் பேசினார்.இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய அரசின் தலைமை அரசு வக்கீலை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும் விவகாரத்தில் சட்டரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக சட்ட ரீதியாக எதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசித்துள்ளார்.அடுத்தகட்டமாக மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வாலை கவர்னர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கவர்னர் ஆர்.என்.ரவி தனது பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற 13-ந் தேதி இரவு சென்னை திரும்புகி றார்.எனவே, 13-ந் தேதிக்கு பிறகு செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.