காவிரி பிரச்சினை குறித்து சித்தராமையாவுடன் தமிழக முதல்-அமைச்சர் பேச வேண்டும் - கர்நாடக விவசாயிகள் கோரிக்கை

காவிரி பிரச்சினை குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுடன் பேச வேண்டும் என்று கர்நாடக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-06 23:55 GMT

பெங்களூரு,

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு, கர்நாடகத்தில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கூறி உத்தரவிட்டது. அதன்படி கடந்த 8 நாட்களாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதன்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 6,294 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 6,794 கன அடி தண்ணீர் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதற்கிடையே தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8 நாட்களாக மண்டியாவில் பல்வேறு இடங்களில் அம்மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மண்டியா டவுனில் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். கன்னட அமைப்பினர் தலைமையில் ஒரு பிரிவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல கஸ்தூரி கர்நாடகா மக்கள் நல அமைப்பினர் மண்டியா டவுனில் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் சாலையில் படுத்து உருண்டு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், 'தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தக்கூடாது. தமிழ்நாடு தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டை அணுகி வருகிறது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தவிர்த்து, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகத்தின் நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்