பொருட்கள் வாங்காமலேயே வாடிக்கையாளர்களிடம் பணம் பிடித்த தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

பொருட்கள் வாங்காமலேயே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்த தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தாவணகெரே நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2022-09-05 15:08 GMT

சிக்கமகளூரு;

புதிய டி.வி. வாங்க..

தாவணகெரே டவுன் பகுதியில் எலக்ட்ரானிக் கடை ஒன்று உள்ளது. இந்த நிலையில் அந்த கடைக்கு டி.வி. வாங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த முனிரத்னா மற்றும் சாமி என்பவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு சென்று இருந்தனர். பின்னர் அங்கிருந்த 2 டி.வி.களை வாங்க அவா்கள் முடிவு செய்தனர். ஆனால் விலை அதிகமாக இருந்ததால், அவர்கள் தவணை முறையில் வாங்குவதற்கு முன்வந்து உள்ளனர்.

இதையடுத்து அங்கு இருந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தவணை முறையில் டி.வி.யை வாங்க வங்கி கணக்கு எண், ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை கொடுத்துள்ளனர்.

நுகர்வோர் கோர்ட்டு

ஆனாலும் அவர்கள் டி.வி.க்கான விலையை குறைக்காததால், டி.வி.யை வாங்காமல் தங்களுடைய ஆவணங்களை வாங்கி கொண்டு திருப்பி வந்தனர். இந்த நிலையில் முனிரத்னா வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரமும், சாமி வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரமும் எடுக்கப்பட்டதற்கான குறுந்தகவல் அவர்கள் செல்போன் எண்ணிற்கு வந்துள்ளது.

இந்த திருட்டு தொடர்ந்து நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் சோ்ந்து வங்கிக்கு சென்று கேட்டபோது, டி.வி. வாங்க சென்ற தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் இதுகுறித்து தாவணகெரேவில் உள்ள நுகா்கோர் கோர்ட்டில் புகார் அளித்தனர்.

அபராதம்

இதுதொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில் நீதிபதி தியாகராஜ் தீர்ப்பு வழங்கினார்.

அதில் தனியார் நிதி நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதில் முனிரத்னா, சாமிக்கு தலா ரூ.20 ஆயிரம் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்