அமலாக்கத்துறைக்கு எதிரான ஜார்கண்ட் முதல்-மந்திரியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
அமலாக்கத்துறைக்கு எதிரான ஜார்கண்ட் முதல்-மந்திரியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பண மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்க இயக்ககம் சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனை ரத்துசெய்ய உத்தரவிடக் கோரி ஹேமந்த் சோரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கி அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, அரசியல் பழிவாங்கல் காரணமாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார்.
'இதுதொடர்பாக நிவாரணம் பெறுவதற்கு நீங்கள் ஏன் ஜார்கண்ட் ஐகோர்ட்டை அணுகக் கூடாது? நீங்கள் ஐகோர்ட்டையே நாடுங்கள். மனுவை திரும்பப்பெறுவதற்கு நாங்கள் அனுமதி அளிக்கிறோம்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.