நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறை: மறுபரிசீலனை செய்ய சுப்ரீம்கோர்ட்டு ஒப்புதல்

நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம்கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2022-11-17 18:15 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்திய நீதித்துறையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக கொலிஜியம் முறை பின்பற்றப்படுகிறது. கொலிஜியம் என்பது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் 4 பேர் கொண்ட குழுவாகும்.

இந்த குழு சுப்ரீம் கோட்டிற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது, நீதிபதிகளை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொலிஜியம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் நீதிபதிகள் நியமன அறிவிப்பை வெளியிட்டு அதற்கான ஒப்புதலை ஜனாதிபதி அளிப்பார். இதனிடையே, நீதிபதிகள் நியமனம், கொலிஜியம் முறை குறித்து மத்திய சட்டமந்திரி கிரண் ரிஜிஜூ அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அவர், "உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நியமிக்கிறது என்றும், இந்தியாவில் மட்டும்தான் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்கிறார்கள் என தெரிவித்த கிரண் ரிஜிஜு, இவ்வாறு கூறுவதால் நீதிபதிகளை தான் விமர்சிப்பதாகக் கருதக் கூடாது என்றும் கொலிஜியம் முறை தனக்கு ஏற்புடையது அல்ல என்ற கருத்தையே கூற விரும்புவதாகவும், நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையில் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொலிஜியம் நடைமுறை குறித்து மறுபரிசீலனை செய்ய சுப்ரீம்கோர்ட்டு முன்வந்துள்ளது. இதனை தெரிவித்துள்ள சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், கொலிஜியத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்