மோர்பி பால விபத்து: குஜராத் பாஜக அரசுக்கு அதிகாரத்தில் இருக்க உரிமை இல்லை - அசோக் கெலாட்
குஜராத்தில் பாஜக அரசு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது.
இதனிடையே, சாத் பூஜை மற்றும் விடுமுறையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.30) மாலை அந்த தொங்குபாலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
அப்போது பாரம் தாங்காமல் திடீரென தொங்குபாலம் அறுந்து விழுந்தது. இதில், பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த அனைவரும் மச்சு ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த கோர விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், குஜராத் பாஜக ஊழல் அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மோர்பி பாலம் விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ரூ.2 கோடியில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது, அதாவது 6 சதவீதம் மட்டுமே பாலத்தின் பராமரிப்புக்காக செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குஜராத் பாஜக அரசின் ஊழலுக்கு இது உதாரணம். இதுபோன்ற ஊழல் நிறைந்த அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை." இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தாத வரையில், அரசாங்கத்தில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது என்ற உண்மை வெளிவராது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.