அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் குலுங்கிய நேபாளம்: வடமாநிலங்களும் அதிர்ந்தன
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் நேபாளம் குலுங்கியது. இதன் எதிரொலியாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களும் அதிர்ந்தன.
காத்மாண்டு,
நமது அண்டை நாடான நேபாளத்தில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மதியம் 2:25 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவானது.
அதை தொடர்ந்து மதியம் 2:51 மணிக்கு அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது.
அதன் பின்னர் மதியம் 3:06 மற்றும் 3:19 மணிக்கு முறையே 3.6 மற்றும் 3.1 என்ற அளவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த தொடர் நிலநடுக்கங்களால் மலைபிரதேசமான நேபாளம் கடுமையாக குலுங்கியது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய அளவில் உணரப்பட்டது. கட்டிடங்கள் லேசாக குலுங்கின. அறைகளின் மின்விசிறிகள், பிரிட்ஜ், மேஜை போன்ற பொருட்கள் அசைந்தாடின.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.