பொய் செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை டி.கே.சிவக்குமார் பேட்டி

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் விதமாக பொய் செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-27 18:45 GMT

பெங்களூரு-

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் விதமாக பொய் செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பிரியங்க் கார்கே சந்திப்பு

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு நேற்று காலையில் தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி பிரியங்க் கார்கே சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் அரை மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வை-பை மண்டலங்கள்

தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி பிரியங்க் கார்கே, என்னை சந்தித்து சட்டசபை தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள், அதை நிறைவேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அவற்றில் முக்கியமானது, பெங்களூருவில் வை-பை மண்டலங்களை அமைப்பதாகும். இதனை பெங்களூருவில் அமல்படுத்துவது குறித்து 2 பேரும் ஆலோசித்தோம்.

வருகிற 31-ந் தேதி பெங்களூருவில் வை-பை மண்டலங்களை அமைப்பது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற உள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகளை உள்துறையும், தகவல் மற்றும் தொலை தொடர்பு துறையும் இணைந்து செய்ய உள்ளது.

கிரக லட்சுமி திட்டம்

மற்ற மாநில அரசுகள் அமல்படுத்தாத பல்வேறு சிறப்பு திட்டங்களை கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. வருகிற 30-ந் தேதி 1.10 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் தொடங்கப்பட உள்ளது.

காங்கிரஸ் அரசு 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதுடன், மாநில வளர்ச்சியிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்