கர்நாடகத்தில் வரி ஏய்ப்பில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை; அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு

கர்நாடகத்தில் வரி ஏய்ப்பில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-09-14 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக அரசின் வணிக வரித்துறை ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர்கள் கோவிந்தராஜ், நசீர்அகமது உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகத்தில் வணிக வரித்துறையின் வரி வசூல் வளர்ச்சி 19.2 சதவீதமாக உள்ளது. இது நாட்டிலேயே மிக அதிகம். இதற்கு திருப்தி கொள்ளாமல், வரி ஏய்ப்புகளை கண்டறிந்து, வரி வசூலை அதிகரிக்க வேண்டும். இதை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். வணிக வரித்துறையில் உள்ள அமலாக்க பிரிவை மேலும் பலப்படுத்த வேண்டியது அவசியம்.

நாட்டின் மொத்த வரி வசூலில் கர்நாடகத்தின் பங்கு 9.4 சதவீதம் ஆகும். வரி வசூல் வளர்ச்சி 24 சதவீதம் இலக்காக வழங்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வரி வருவாய் கசிவை தடுக்க வேண்டும். வரி வசூல் இலக்கை தாண்டி சாதிக்க வேண்டும். 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வணிக வரித்துறை ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

வரி திருட்டை தடுக்க தேவையான வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. நீங்கள் முயற்சி மேற்கொண்டால் மாநிலத்திற்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக எனது கவனத்திற்கு தகவல் வந்துள்ளது. இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வரி வசூலிக்க வேண்டும். வரி வருவாய் அதிகரித்தால் அதிகளவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும். அதிகாரிகள் கூட்டு பொறுப்பேற்று பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இதில் முதல்-மந்திரியின் கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் எல்.கே.அதீக், நிதித்துறை செயலாளர்கள் பி.சி.ஜாபர், வணிக வரித்துறை கமிஷனர் ஷிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்