அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை; நடிகர் சுதீப் பேட்டி

அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று நடிகர் சுதீப் கூறியுள்ளார்.

Update: 2023-02-15 21:20 GMT

பெங்களூரு:

பெரும் வரவேற்பு

நடிகர் சுதீப் கன்னட திரைத்துறையின் முன்னணி கதாநாயகனாக இருந்து வருகிறார். கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இதனால் பிற மாநிலங்களிலும் அவர் பிரபலமாக திகழ்கிறார். அவர் கன்னட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை அவர் நடத்தும் விதம் கன்னர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி சுதீப்பை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரசுக்கு வருமாறு அவருக்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு முன்பு சுதீப்பை நடிகை ரம்யாவும் நேரில் சந்தித்து காங்கிரசில் சேருமாறு கேட்டு கொண்டதாக தகவல் வெளியானது.

கட்சிக்கு பலம் கிடைக்கும்

அவர் பழங்குடியின(வால்மீகி) சமூகத்தை சேர்ந்தவர். இந்த சமூகத்தினர் பெலகாவி, பல்லாரி, சித்ரதுர்கா, கொப்பல் உள்ளிட்ட வட கர்நாடகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். சுதீப் காங்கிரசில் சேர்ந்தால் அதன் மூலம் கட்சிக்கு பலம் கிடைக்கும் என்று அக்கட்சியின் தலைவர்கள் கருதுகிறார்கள். இதுகுறித்து நடிகர் சுதீப் கூறியதாவது:-

கா்நாடகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் எனக்கு நண்பர்கள். அதாவது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, டி.கே.சிவக்குமார், சித்தராமையா என அனைவரிடமும் எனக்கு நல்லுறவு உள்ளது. சில தலைவர்கள் என்னை சந்தித்து பேசினர். மக்களுக்கு சேவையாற்ற அதிகாரம் கட்டாயம் வேண்டும் என்று சொல்ல முடியாது.

அதிகாரம் இல்லாமலேயே எனது பலத்திற்கு ஏற்ப உதவிகளை நான் செய்கிறேன். தொடர்ந்து செய்வேன். நான் அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் ரசிகர்களின் விருப்பம் முக்கியமானது. அவா்களின் விருப்பமே எனது விருப்பம்.

இவ்வாறு சுதீப் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்