சிக்கமகளூருவை மாதிரி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை-மந்திரி கே.ஜே.ஜார்ஜ் உறுதி
சிக்கமகளூருவை மாதிரி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:-
சுதந்திர தினவிழா
சிக்கமகளூருவில் நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று காலை சிக்கமகளூரு சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் நடந்த விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், மின்சாரத்துறை மந்திரியுமான கே.ஜே.ஜார்ஜ் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பெற்று கொண்டார்.
பின்னர் அந்த மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பின்னா் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேசியதாவது:-
நினைவுகூர வேண்டும்
\இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுடன் (நேற்று) 76 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நேரத்தில் சுதந்திர போராட்டத்துக்காக பாடுபட்ட வீரர்களை நான் நினைவுகூர வேண்டும். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்தவர்களை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்தவர்களில் முக்கியமானவர் மகாத்மா காந்தி. இவர் கடந்த 1927-ம் ஆண்டு சிக்கமகளூருவில் தற்போதுள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சிறப்புரையாற்றினார்.
தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், அன்னபாக்ய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாதிரி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 2 திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். மாநில அரசு அமல்படுத்தி உள்ள உத்தரவாத திட்டங்களால் மாநிலத்தில் பல லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சிக்கமகளூரு மாவட்டத்திலும் ஏராளமான மக்கள் அரசின் உத்தரவாத திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் மக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. சிக்கமகளூருவை மாதிரி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த், தம்மய்யா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.