கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு மார்ச் 31-ந் தேதி தொடங்கும்; பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. ஆண்டு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 31-ந் தேதி தொடங்கும் என்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2023-01-19 18:45 GMT

பெங்களூரு:

கால அட்டவணை

கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி தொடங்க உள்ளது. இதற்கான கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மராட்டி, உருது, ஆங்கில பாடத்தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் 3-ந் தேதி கணிதம், சமூகவியல், 6-ந் தேதி 2-வது மொழி ஆங்கிலம், கன்னடம், 8-ந் தேதி பொருளியல், 10-ந் தேதி அறிவியல், 15-ந் தேதி சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு தினமும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணிக்கு நிறைவடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வகுப்புகள்

கர்நாடகத்தில் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். கொரோனா பரவல் இல்லாத சூழ்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தொடர்பாக விடுமுறை இல்லாமல் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

அதனால் கொரோனாவுக்கு முன்பு எப்படி தேர்வு நடத்தப்பட்டதோ அதேபோல் தற்போது இந்த பொதுத்தேர்வை நடத்த பள்ளி கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. கேள்வித்தாள் கசியாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்