அறுவை சிகிச்சை கத்தியால் மருத்துவ மாணவியை கழுத்தறுத்து கொன்ற 'சாப்ட்வேர் இன்ஜினியர்' - காதலை முறித்ததால் ஆத்திரம்
தபஸ்விக்கும், ஞானேஸ்வரனுக்கு சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு பிடிஎஸ் படிப்பு பயின்று வருபவர் தபஸ்வி (வயது 20). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சாப்ட்வேர் இன்ஜினியரான ஞானேஸ்வர் என்ற இளைஞருடன் சமூகவலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே, கடந்த சில மாதங்களாக காதலர்கள் தபஸ்வி - ஞானேஸ்வர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக தனது காதலன் ஞானேஸ்வர் மீது தபஸ்வி விஜயவாடா போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தபஸ்வியை விட்டு விலகும்படியும், அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்று ஞானேஸ்வருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் ஞானேஸ்வருடனான காதலை தபஸ்வி முறித்துக்கொண்டுள்ளார்.
இதன் பின்னர், கடந்த வாரம் தபஸ்வி குண்டூர் மாவட்டம் தக்கல்லப்பேடு பகுதியில் உள்ள தனது தோழியின் தங்கி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடனான காதலை தபஸ்வி முறித்துக்கொண்டதால் அவர் மீது ஞானேஸ்வர் மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார். மேலும், தபஸ்வி தனது தோழியுடன் தக்கல்லப்பேடுவில் தங்கி இருப்பதை ஞானேஸ்வர் அறிந்துகொண்டார்.
இதையடுத்து, ஞானேஸ்வர் நேற்று தபஸ்வி தனது தோழியுடன் தங்கி இருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன்னை காதலிக்குமாறு தபஸ்வியை அவர் வலியுறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஞானேஸ்வர் தான் மறைத்து வைத்திருந்த அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியை கொண்டு தபஸ்வியின் கழுத்தை அறுத்தார். இதில், ரத்த வெள்ளத்தில் தபஸ்வி சரிந்து விழுந்தார்.
இதை கண்ட தபஸ்வியின் தோழி அலறியடித்துக்கொண்டு ஞானேஸ்வரை வீட்டின் அறையில் பூட்டி வைத்துவிட்டு வெளியே ஓடி வந்து உதவி கேட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பூட்டிய வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
அங்கு தபஸ்வி ரத்த வெள்ளத்தில் கிடக்க தாக்குதல் நடத்திய ஞானேஸ்வர் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து, ஞானேஸ்வரிடமிருந்து கத்தியை கைப்பற்றிய மக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்த தபஸ்வியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தபஸ்வி சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலியை கழுத்தறுத்து கொன்ற சாப்ட்வேர் இன்ஜினியர் ஞானேஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.