ஐதராபாத்-அயோத்தி நேரடி விமான சேவையை நிறுத்தியது ஸ்பைஸ்ஜெட்

ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நேரடி விமான சேவை 2 மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது.

Update: 2024-06-13 12:49 GMT

ஐதராபாத்:

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு, அயோத்திக்கு முக்கிய நகரங்களில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கத் தொடங்கியது. ஐதராபாத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கியது. இந்த இடைநில்லா விமானங்கள், வாரத்தில் மூன்று முறை இயக்கப்பட்டன.

இந்நிலையில், ஐதராபாத்- அயோத்தி நேரடி விமான சேவையை கடந்த 1-ம் தேதியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் நேரடி விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது. டிக்கெட் விற்பனை குறைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இப்போது, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஐதராபாத்தில் இருந்து அயோத்தி செல்ல வேண்டுமானால், ஐதராபாத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஒரு விமானத்தில் அயோத்தி செல்ல வேண்டும். 

இதற்கு முன்பு, சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கான நேரடி விமான சேவைகளையும் ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து மட்டும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நேரடி விமானங்கள் செல்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்