பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. கொலை வழக்கில் 7 பேர் குற்றவாளிகள்- சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
முக்கிய குற்றவாளியான அஷ்ரப், அட்டிக் அகமது மற்றும் ரபிக் ஆகியோர் இறந்துவிட்டதால், அவர்களுக்கு எதிரான விசாரணை கைவிடப்பட்டது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் ராஜு பால். பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வான இவர், அரசியல் முன்விரோதம் காரணமாக கடந்த 2005-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
2002-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரயாக்ராஜ் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட ராஜு பால், பிரபல தாதாவும் அரசியல் பிரமுகருமான அட்டிக் அகமதுவிடம் தோல்வியடைந்தார். ஆனால் அட்ரிக் அகமது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பிரயாக்ராஜ் மேற்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அட்டிக் அகமதுவின் சகோதரர் அஷ்ரப்பை ராஜு பால் தோற்கடித்தார். இந்த விரோதம் நாளுக்கு நாள் முற்றிய நிலையில், ராஜு பால் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அட்டிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கு 2016-ம் ஆண்டு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, எம்.எல்.ஏ. கொலை வழக்கில் ரஞ்சீத் பால், அபித், பர்ஹான் அகமது, இஸ்ரார் அகமது, ஜாவேத், குல்ஹாசன் மற்றும் அப்துல் கவி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் விரைவில் வெளியிடப்படும்.
விசாரணை நடைபெற்ற காலத்தில் முக்கிய குற்றவாளியான அஷ்ரப், அட்டிக் அகமது மற்றும் ரபிக் ஆகியோர் இறந்துவிட்டதால், அவர்களுக்கு எதிரான விசாரணை கைவிடப்பட்டது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அட்டிக் அகமது, அஷ்ரப் இருவரையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றபோது இருவரும் மருத்துவமனை அருகிலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.