நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இடம் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்புடையதா?சமூக ஆர்வலர்கள் கருத்து

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இடம் - மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்புடையதா? என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Update: 2023-09-20 22:32 GMT

பெங்களூரு:

நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் மாநில சட்டசபை ஆகியவற்றில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. நாடாளுமன்ற மேலவையிலும் இது நிறைவேறிய பிறகு சட்டவடிவம் பெறும். 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே மக்கள் தொகை கணக்கு எடுப்புக்குப் பிறகு 2029-ம் ஆண்டு வாக்கில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான கட்சிகள் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றன. பிரதான கட்சிகள் உள் ஒதுக்கீடு கேட்கின்றன.

2010-ம் ஆண்டு இந்த இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு மக்களவையில் நிறைவேறாமல் போனது குறிப்பிடத் தக்கது.

இந்தனை ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த மசோதா தற்போது அவசர, அவசரமாக நிறைவேற்ற காரணம் என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் எழுந்து உள்ளன.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

அரசியலுக்கு மட்டும்தானா?

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சமூக சேவகர் கே.அகிலா கூறும் போது, 'பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா வரவேற்கதக்கதாக இருந்தாலும், இதனால் சமானிய மக்களுக்கு ஒன்றும் பெரிதாக நிகழ்ந்துவிடப் போவதில்லை. இந்த மசோதா அரசியலுக்கு மட்டும் தானா? பெண்கள் எம்.எல்.ஏ. ஆகலாம், எம்.பி. ஆகலாம் என்றுதான் சமானிய மக்கள் புரிந்து உள்ளனர். அரசு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதார, விவசாயம் உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள், சுயதொழில் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இந்த இடஒதுக்கீடு அரசியல் பயன்பாட்டுக்கு மட்டுமே இருக்க கூடாது. நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் இடஒதுக்கீடு என்றால் பெண்கள் டம்மியாகத்தான் இருப்பார்கள். அங்கெல்லாம் ஆண் ஆதிக்கம்தான் இருக்கும். இதனால் பெண்களுக்கு எந்த பயனும் இருக்காது. அரசின் நோக்கமும் முழுமை பெறாது' என்றார்.

சென்னை குரோம்பேட்டை என்.தேன்மொழி கூறும் போது, 'அரசியலில் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டு முறையை கொண்டு வரவேண்டும். அரசியலில் நேர்மை, தூய்மை, உண்மையை பெண்களால் கொண்டு வரமுடியும். இதன் மூலம் ஓர் ஆரோக்கியமான அரசியலையும், சமுதாயத்தையும் பெண்களால் படைக்க முடியும். அரசியலைத் தாண்டி பெண்கள் கால் பதிக்கும் துறைகள் அனைத்தும் மேம்பட்டு வருகின்றன. தற்போது விண்வெளித்துறையில் சாதனை படைத்து உலக அரங்கில் நம் நாட்டின் புகழை மென்மேலும் பரப்பி வருகின்றனர். பெண்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களும் தோல்வியை தழுவாமல் வெற்றியுடன் செயல்படும். எனவே பெண்களை நம்பி அனைத்து துறைகளையும் ஒப்படைக்கலாம். வெற்றியில்தான் முடியும்' என்றார்.

கணக்கெடுப்பு நடத்துவது சரியல்ல

பெங்களூருவை சேர்ந்த தேசிய பெண்கள் கூட்டணி தலைவரும், தலித் பெண்கள் கூட்டமைப்பு தேசிய தலைவரும், கர்நாடக பெண்கள் குரல் அமைப்பின் செயலாளரும், பெண்கள் நல ஆர்வலருமான ரூத் மனோரமா கூறியதாவது:-

மத்திய அரசு நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் உள்பட பல்வேறு அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. இப்போது தான் அதற்கான வாய்ப்பு வந்துள்ளது. இதில் அரசியல் நேக்கம் இருந்தாலும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. அரசியலில் பாலின சமத்துவம் ஏற்பட வேண்டும். பெண்கள் தங்களின் பிரச்சினைகளை பேச வேண்டும். இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் பிறகு அமல்படுத்துவதாக சொல்வது சரியல்ல. தொகுதிகள் மறுவரையறை என்று சொல்லி காலம் கடத்துவது ஏற்புடையது அல்ல. தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த சட்டம் மூலம் மக்களவையில் சுமார் 180 எம்.பி.க்கள் பெண்கள் இருப்பார்கள். இந்த சட்ட மசோதாவை அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனே அமல்படுத்த வேண்டும்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலை சேர்ந்த சமூக ஆர்வலர் சித்ரா பக்தவச்சலம் கூறியதாவது:-

பெண்களின் உரிமைகளை பாதுகாக்க பெண்களுக்கு குரல் கொடுக்க நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பெண்கள் நீண்ட ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால் ஆட்சியில் இருந்தவர்கள் அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு இருந்தனர். தற்போது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம். இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும்.

சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் 4 ஆண் வேட்பாளர்களுக்கு நிகராக ஒரு பெண்ணுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டால், மகளிரின் முன்னேற்றத்திற்கும், பெண் சமுதாயத்திற்கு எதிரான கொடுமைகளை தடுக்கவும் குரல் கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரதியாரின் கனவு நனவாகும்

சிவமொக்கா டவுன் வினோபா நகரை சேர்ந்த பல் டாக்டர் தமிழரசி கூறியதாவது:-

இந்தியாவில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது மிக தாமதமான செயல்தான். இருப்பினும் பாரதியார் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற கனவு நினைவாக உள்ளதை நினைத்து என்னைப் போன்ற பெண்கள் பெரிதும் வரவேற்று மகிழ்கிறோம். பெண்கள் படித்து இன்றும் தங்களுடைய சுதந்திர கனவுகளை மறந்து, புகுந்த வீட்டில் குடும்பப் பெண்ணாக முடங்கிக் கிடக்கும் வீடுகள் நாட்டில் ஆயிரம், ஆயிரம். பல ஆண்டாக கிடப்பில் கிடந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இப்போது நிறைவேற்ற முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த பெண்கள் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா என்று அறிந்து நாட்டில் பல பெண்கள் பல பணிகளில் இருந்தாலும், மின் பொறியாளராக, டாக்டராக, வங்கி மேலாளராக, மாநில முதல்-மந்திரியாக, நாடாளுமன்றம், சட்டமன்றம் உறுப்பினர்களாக ெபண்கள் இருந்து வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கு போதிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இந்த புதிய மகளிர் இட ஒதுக்கீடு, பல துறைகளில் பெண்கள் சாதித்தது போல், அரசியலிலும் தங்கள் திறமைகளை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இனி வெளிப்படுத்த உறுதுணையாக இருக்கும்.

33 சதவீத பெண்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதில் எந்த ஒரு மாறுபட்ட கருத்தும் கிடையாது. தாமதமாக இட ஒதுக்கீடு மசோதா அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஒருமித்த கருத்தாக கொண்டு சட்டம் நிறைவேறி நடைமுறை வந்தால் பாரதி கண்ட பெண்கள் உரிமை கனவு நனவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடிக்கு நன்றி

உடுப்பி மாவட்டம் மூடபித்ரி பகுதியை சேர்ந்த பேப்பர் பிளேட் தயாரிப்பாளரான பவித்ரா கூறியதாவது:-

நாடாளுமன்றம், சட்டசபையில் இதுவரை பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. குறைந்த அளவிலேயே பெண்கள் அரசியலில் உள்ளனர். வீட்டை நிர்வகிக்கும் பெண்களால் நாட்டை ஆள முடியும் என்பதற்கு பல பெண்கள் முதல்-மந்திரியாக இருந்துள்ளனர். நீண்டகாலமாக கிடப்பில் கிடந்தாலும் தற்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் பெண்கள் மீது அதிக அக்கறை கொண்டு பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு செய்து தர வேண்டும். இந்த இடஒதுக்கீடு மூலம் இனி நாடாளுமன்றம், சட்டசபையில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். மேலும் பெண்களின் பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண் உறுப்பினர்கள் குரல் எழுப்ப இந்த இடஒதுக்கீடு மசோதா உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்