பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.67½ லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.67½ லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-10-21 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் தங்கம், போதைப்பொருள் கடத்தி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து தங்கம் கடத்திவரப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் வந்த ஒரு பெண் பயணியின் உடைமைகளை சுங்கவரித் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்த ரவிக்கையில் (ஜாக்கெட்) எம்பிராய்டரியில் இருந்த சிறு, சிறு கம்பிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.

உடனே அந்த சிறு, சிறு கம்பிகளை மீட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவை அனைத்தும் தங்கம் என்பதும், தங்கத்தை சிறிய கம்பிகளாக வடிவமைத்து, ஜாக்கெட் எம்பிராய்டரியில் கோர்த்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்து ரூ.17 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 300 கிராம் 95 மில்லிதங்கத்தை மீட்டனர்.

அதுபோல் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பெண் பயணி தனது உடலில் மாத்திரை வடிவில் பதுக்கி கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்த பெண்ணிடம் இருந்து 578 கிராம் 27 மில்லி தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.34.40 லட்சம் ஆகும். மேலும் அந்த பெண் பயணியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் குவைத்தில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் ஆண் பயணி ஒருவர் முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட உலர் பழங்களுடன் தங்கத்தை சிறு, சிறு துண்டுகளாக்கி வெள்ளை நிற வர்ணம் பூசி தங்கம் கடத்தி வந்திருந்தார். அதை கண்டுபிடித்த சுங்கத்துறையினர், அந்த தங்கத்தை பறிமுதல் செய்து, அந்த பயணியை கைது செய்தனர். இவரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலான 254 கிராம் தங்கம், ரூ.1.49 லட்சம் மதிப்பிலான ஐ போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

3 சம்பவங்களிலும் ஒட்டுமொத்தமாக விமானங்களில் பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.67 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், இரு பெண்கள் உள்பட 3 பேரை சுங்கத்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்