மும்பை விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது

மொத்தம் 10 கிலோ எடை கொண்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-06-04 22:03 GMT

மும்பை,

மும்பை விமான நிலையத்திற்கு நேற்றைய தினம் சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்ட 2 பயணிகளின் உடைகள் மற்றும் உடமைகளை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

இந்த சோதனையின் போது அந்த 2 பயணிகளும் தங்கள் உடைகளில் 8 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் மூலம், இவர்களோடு இணைந்து செயல்பட்ட மற்றொரு நபரையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 8 கிலோ எடை கொண்ட ரூ.4.94 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 3 பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதே போல மற்றொரு சம்பவத்தில் துபாயில் இருந்து வந்திறங்கிய ஒரு பயணியிடம் இருந்து 2 கிலோ எடை கொண்ட ரூ.1.23 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த இருவேறு கடத்தல் சம்பவங்களின் மூலம் மொத்தம் 10 கிலோ எடை கொண்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்