பட்டங்களை விட திறமைகளே எதிர்காலத்தை வளப்படுத்தும் - மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான்
பட்டங்களை விட திறமைகளே எதிர்காலத்தை வளப்படுத்தும் என மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.
இந்த வார இறுதியில் நடைபெறும் 3-வது ஜி20 கல்விச் செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு புவனேஸ்வரில் நேற்று சிறப்பு மாநாடு நடந்தது. இதில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சீர்குலைக்கும் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தால் பழைய வேலைகள் மறைந்து வருகின்றன. புதிய வேலைகள் உருவாகி வருகின்றன. ஆனால் நமது பணியாளர்களுக்கு தொடர்ச்சியான திறன், மறுதிறன் மற்றும் மேம்பாடு தேவை.
பட்டங்களை விட திறமையும், திறனும்தான் எதிர்காலத்தை வளப்படுத்தும். கடவுள் கொடுத்த மனித அறிவுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே தொடர்ந்து போட்டி இருக்கும். எனவே, எதிர்கால வேலைகளுக்கு இளைஞர்களை தயார்படுத்துவதற்கான புதிய அணுகுமுறைகளை நாம் சிந்திக்க வேண்டும். பொருட்கள், நாகரிகத்தின் எதிர்காலத்தை பாதிக்கப் போவதில்லை. மனித இயல்புதான் மனித எதிர்காலத்தை பாதிக்கப்போகிறது. 21-ம் நூற்றாண்டு, அறிவு சார்ந்ததாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் இருக்கும்.
இணையதளம், இயக்கம் மற்றும் உலகளாவிய இணைப்பு ஆகியவை உலகளாவிய தேவைகள் குறித்து சிந்திப்பதற்கு நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இந்த வாய்ப்பை இந்தியாவின் இளைஞர்களுக்கும், உலகளாவிய தெற்கைச் சேர்ந்தவர்களுக்கும் மாற்ற நாம் ஒன்றுபட வேண்டும்.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.