உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
ஒரே மாதிரியான வாக்காளர் பட்டியலை பயன்படுத்த மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிடக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் உள்ளிட்ட 3 ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் பட்டியலை பயன்படுத்த மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
அதே போல் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாததால், தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த பொதுநல மனுவின் நகலை மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர்களுக்கு வழங்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.