ஜனாதிபதி தேர்தல்: சரத் பவாரை பொதுவேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை எனத்தகவல்

பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Update: 2022-06-13 14:05 GMT

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதி ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும். இந்த நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ந் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் வரும் 15-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு 29-ந் தேதி கடைசி நாள்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு 49 சதவீத வாக்குகள் உள்ளன. அந்த கூட்டணியே வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச்செய்வதற்கு 51 சதவீத ஓட்டுகள் வேண்டும். இந்த நிலையில் பா.ஜ.க.வின் பார்வை, தங்களது கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் இடம் பெறாத ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஒடிசாவின் பிஜூ ஜனதாதளம் ஆகியவற்றின் மீது படிந்துள்ளது. அந்த கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டால் தனது கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்தி, பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற முடியும்.

ஆனால் இதற்கிடையே, ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடனும் பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. இறங்கி உள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கீகாரம் அளித்து 2 தலைவர்கள் கொண்ட குழுவை பா.ஜ.க., நேற்று அமைத்துள்ளது. இந்த குழுவில் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவும், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் இடம் பெற்றுள்ளனர்.

இதனிடையே, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவாரை சந்தித்து பேசியுள்ளார்.

ஆனால் அந்த சந்திப்பில் தேர்தலில் போட்டியிட சரத்பவார் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் சரத் பவார் போட்டியிட்டால் அவருக்கு மம்தா மற்றும் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் 15-ந் தேதி காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நாளில் டெல்லியில் பகல் 3 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்