காலி குடங்களுடன் செஸ்காம் அலுவலகம் முற்றுகை; கிராம மக்கள் போராட்டம்

மடிகேரியில் 12 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் செஸ்காம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-03 18:45 GMT

குடகு:-

குடிநீர் கிடைக்காமல் அவதி

குடகு மாவட்டம் மடிகேரியை அடுத்த ஒசகேரி கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட அரேக்காடு நேதாஜிநகர் பகுதியில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 12 நாட்களாக இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது சமீபத்தில் பெய்த மழையில் டிரான்ஸ்பார்மர் ஒன்று சேதம் அடைந்துவிட்டது. இந்த சம்பவம் நடந்து 2 வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது.

டிரான்ஸ்பார்மரை சரி செய்யும்படி அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் செஸ்காம் ஊழியர்களிடம் கோரிக்கை வைத்துவிட்டனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தில் தொடர்ந்து மின் தடை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் இந்த மின்தடையால் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப முடியாமல் போய்விட்டது.

இதனால் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் மாற்று வழிமுறையில் குடிநீர் கிடைக்க செய்யவேண்டும் என்று கிராம மக்கள் ஒசகேரி கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

காலி குடங்களுடன் போராட்டம்

ஆனால் அவர்களும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் கடந்த 12 நாட்களாக நேதாஜிநகர் பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வந்தனர். அதே நேரம் செஸ்காம் அலுவலகம் செல்லும் மக்களை அங்குள்ள ஊழியர்கள் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் ஒசகேரி கிராம பஞ்சாயத்து மற்றும் செஸ்காம் அலுவலகத்தை முற்றுகையிட்டு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த செஸ்காம் அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கவேண்டும், தினமும் தடையின்றி குடிநீர் வழங்கவேண்டும். மேலும் பொதுமக்களை அவதூறாக பேசிய என்ஜினியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். குடிநீர் வழங்கப்பட்டது

இதை கேட்ட செஸ்காம் அதிகாரிகள் உடனே புதிய டிரான்ஸ்பார்மரை வரவழைத்து, மின் தடையை சீர் செய்தனர். மேலும் மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்தனர். இதையடுத்து அந்த கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்