சித்தராமையா என்னால் 2 முறை அரசியலில் மறுவாழ்வு பெற்றார்- முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி

சித்தராமையா என்னால் 2 முறை அரசியலில் மறுவாழ்வு பெற்றார் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-13 21:23 GMT

பெங்களூரு: சித்தராமையா என்னால் 2 முறை அரசியலில் மறுவாழ்வு பெற்றார் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இணைந்தனர்

பெங்களூருவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் நேற்று துமகூருவை சேர்ந்த காங்கிரஸ், பா.ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி முன்னிலையில் இணைந்தனர். பின்னர் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கீழ் மட்டமாக பேசமாட்டேன்

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வந்துள்ளது. அவர் கோலாரில் போட்டியிடுவதால் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் எங்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் யாரும் மாறவில்லை. சித்தராமையா மட்டும் இல்லை, வேறு யார் கோலார் தொகுதியில் போட்டியிட்டாலும் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு பாதிப்பு ஏற்பட போவதில்லை.

கோலார் தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு சீனிவாச கவுடா வெற்றி பெற்றிருந்தார். கட்சிக்கு துரோகம் செய்து விட்டு அவர் சென்றுள்ளார். கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட இருப்பது குறித்து நான் கீழ் மட்டமாக பேச மாட்டேன். அவர் ஒரு முன்னாள் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் ஆவார்.

2 முறை மறுவாழ்வு பெற்றார்

ஒரு முன்னாள் முதல்-மந்திரி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தொகுதியை தேடுவது பற்றியும் தரக்குறைவாக பேசி வருகின்றனர். நான் அவ்வாறு பேச விரும்பவில்லை. தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் சாதி அடிப்படையிலேயே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். அதன்படியே சித்தராமையாவும் கோலாரில் போட்டியிட தீர்மானித்திருக்கலாம். கடந்த சட்டசபை தேர்தலில் சாதி அடிப்படையில் சித்தராமையா போட்டியிட்டார்.

அந்த தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். கடைசி 3 நாட்கள் அந்த தொகுதியில் நான் பிரசாரம் செய்யவில்லை. ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு பாதாமி மக்கள் ஆதரவு தந்திருந்தனர். நான் பிரசாரம் செய்திருந்தால், பாதாமியில் 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் சித்தராமையா தோல்வி அடைந்திருப்பார். எனவே சித்தராமையாவின் வெற்றிக்கு நானும் ஒரு காரணம். சித்தராமையா என்னால் 2 முறை அரசியலில் மறுவாழ்வு பெற்றுள்ளார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்