கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க சித்தராமையா உரிமை கோரினார்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக தோ்வு செய்யப்பட்டதை அடுத்து சித்தராமையா கவர்னரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார்.

Update: 2023-05-18 18:45 GMT

பெங்களூரு:

உற்சாக வரவேற்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்தது. இந்த நிலையில் 4 நாட்கள் இழுபறிக்கு பிறகு முதல்-மந்திரி பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது. டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.

அதாவது, இந்த விவகாரத்தில் சோனியா காந்தி தலையிட்டதால் டி.கே.சிவக்குமார் தனது நிலைப்பாட்டில் இருந்து கீழே இறங்கி வந்து, சித்தராமையாவை முதல்-மந்திரி ஆக்கும் முடிவை ஏற்றுக்கொண்டார்.

முதல்-மந்திரி பதவி விஷயத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டதை அடுத்து சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் டெல்லியில் இருந்து நேற்று மதியம் 3 மணிக்கு தனி விமானத்தில் பெங்களூரு வந்தனர். மாலை 6.30 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர்களை காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் வரவேற்றனர். அந்த விமான நிலையத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். டொள்ளு குனிதா உள்ளிட்ட நாட்டுப்புற இசை கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற்றன.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

பின்னர் சித்தராமையா அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். அதே போல் டி.கே.சிவக்குமார் சதாசிவநகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அவர்கள் 2 பேரும் வீட்டில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்து கொண்டனர். இதில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவின் பெயரை டி.கே.சிவக்குமார் முன்மொழிந்தார். எம்.எல்.ஏ.க்கள் பரமேஸ்வர், எச்.கே.பட்டீல், ஆர்.வி.தேஷ்பாண்டே, எம்.பி.பட்டீல், லட்சுமி ஹெப்பால்கர், தன்வீர்சேட், கே.எச்.முனியப்பா ஆகியோர் வழிமொழிந்தனர். அதைத்தொடர்ந்து சித்தராமையா சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக அதாவது புதிய முதல்-மந்திரியாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மேலிட பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட தலைவர் சித்தராமையாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினர். இந்த கூட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கி 8.30 மணி வரை நடைபெற்றது.

கடிதம் வழங்கினார்

அதைத்தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் மூத்த தலைவர்களுடன் ராஜ்பவனுக்கு சென்றனர். அங்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி சித்தராமையா கடிதம் வழங்கினார். உடனே அவர் ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் விழா நாளை (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு கன்டீரவா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்கிறார்கள். அத்துடன் 20-க்கும் மேற்பட்ட மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.

சித்தராமையா இன்று டெல்லி பயணம்

முதல்-மந்திரியாக சித்தராமையா நாளை பதவி ஏற்கும் விழா நடக்கிறது. இந்த விழாவில் மந்திரிகளும் பதவி ஏற்க உள்ளனர். இந்த மந்திரிகளின் பட்டியலை இறுதி செய்வதற்காக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசும் அவர்கள், மந்திரிகளின் பெயர் பட்டியலை இறுதி செய்கிறார்கள். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மற்றும் கார்கேவின் ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்