துணிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு
வீரசாவர்க்கர் பேனரை அகற்றிய விவகாரத்தில் துணிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவமொக்கா:
வீரசாவர்க்கர் பேனரை அகற்றிய விவகாரத்தில் துணிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேனர் அகற்றம்
சுதந்திர தின விழாவையொட்டி சிவமொக்கா டவுனில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. வீர சாவர்க்கர் உருவப்படமும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி வணிக வளாகத்தில் இருந்த வீர சாவர்க்கரின் உருவப்படத்தை மர்மநபர்கள் அகற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் மர்மநபரை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சுதந்திர தின விழாவில் அமீர் அகமது சர்க்கிளில் வீர சாவர்க்கரின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை மற்றொரு அமைப்பினர் அகற்றியதாக தெரிகிறது. மேலும் அங்கு அவர்கள் திப்பு சுல்தான் பேனரை வைக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து தடியடி நடத்தி இரு தரப்பினரையும் விரட்டி அடித்தனர்.
கத்திக்குத்து
இந்த மோதல் சம்பவத்தால் அந்தப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் சிவமொக்கா, பத்ராவதி நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பதற்றமான சூழ்நிலை காரணமாக நேற்று சிவமொக்கா, பத்ராவதி நகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கஸ்தூரிபா பகுதியில் துணிக்கடை வைத்துள்ள அசோக் நகரில் வசித்த வரும் ராஜஸ்தானை சேர்ந்த பிரேம்சிங் (வயது 26) என்பவர் கடையை அடைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் காந்தி பஜார் பகுதியில் சென்றபோது, அங்கு வந்த மர்மநபர்கள் பிரேம் சிங்கை வழிமறித்து அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த பிரேம் சிங், சிவமொக்கா மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பிரேம் சிங்கை கத்தியால் குத்தியதாக 3 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ஜே.சி.நகரை சேர்ந்த நதீம் (25), அப்துல் ரகுமான் (25) என்பது தெரியவந்தது. மற்றொருவரின் பெயா் தெரியவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய ஜபிஉல்லா (30) என்பவர் என்.டி. சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே பதுங்கி இருப்பதாக இன்று அதிகாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வினோபா நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையிலான போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்போது தன்னை பிடிக்க முயன்ற போலீஸ்காரரை தாக்கிவிட்டு ஜபிஉல்லா தப்பி ஓட முயன்றார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத், தனது துப்பாக்கியால் ஜபிஉல்லாவை நோக்கி சுட்டார். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. இதனால் ஜபிஉல்லா சுருண்டு விழுந்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ஜபி உல்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நலம் விசாரித்தனர்
இந்த நிலையில் கத்திக்குத்து காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பிரேம் சிங்கை நேற்று கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார், மாவட்ட பொறுப்பு மந்திரி நாராயணகவுடா, பா.ஜனதா மாநில துணைத்தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர் தனித்தனியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
குவெம்பு பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
சிவமொக்கா குவெம்பு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கு இன்று தேர்வு நடக்க இருந்தது. ஆனால் நகரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குெவம்பு பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குவெம்பு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.