டெல்லியில் அதிர்ச்சி: ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்த டாக்டர் கொடூர கொலை

டாக்டருக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு இந்த கொலையுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

Update: 2024-05-12 13:44 GMT

புதுடெல்லி,

டெல்லியின் தென்கிழக்கே ஜாங்கிபுரா பகுதியில் வசித்து வந்த மூத்த டாக்டர் யோகேஷ் சந்திரபால் (வயது 63). வீட்டிலேயே கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் உள்ள ஏழைகளிடம் காசு வாங்காமல் இலவச சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்.

அவர்களுக்கு மருந்துகளையும் காசு வாங்காமல் கொடுத்து வந்திருக்கிறார். இவருடைய மனைவி நீனா பால், டெல்லி அரசு மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுடைய மகள்களில் ஒருவர் கனடா நாட்டிலும், மற்றொரு மகள் நொய்டாவிலும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய நீனா பால் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில், சந்திரபால் கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், சந்திரபாலின் வீட்டருகே சந்தேகத்திற்குரிய வகையில், 4 பேர் நிற்பது தெரிந்தது.

ஒருவர் வெளியே நிற்க, மற்ற 3 பேரும் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இந்த குற்றவாளிகள், சந்திரபாலின் வாயை துணியால் பொத்தி, கைகளை நாற்காலி ஒன்றுடன் சேர்த்து கட்டி போட்டனர்.

அந்த நாற்காலியுடன் அவரை சமையலறைக்கு இழுத்து சென்றனர். இதன்பின் அவருடைய தலையில் கட்டையால் தாக்கியதுடன், நாய் சங்கிலியால் கழுத்து பகுதியை நெரித்துள்ளனர். அவருடைய 2 வளர்ப்பு நாய்களையும் குளியலறையில் அடைத்து வைத்தனர். பின்பு, வீட்டை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

கொலை மற்றும் கொள்ளை வழக்கு பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டருக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். அவருடைய வீட்டருகே வசிப்பவர்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்