ஷின்ஜோ அபே மறைவு: இந்தியா ஒருநாள் தேசிய துக்கம்
ஷின்ஜோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். என் அன்பு நண்பரை இழந்துவிட்டேன் என அவர் கூறி உள்ளார். இன்று ஒருநாள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
புதுடெல்லி,
ஷின்ஜோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். என் அன்பு நண்பரை இழந்துவிட்டேன் என அவர் கூறி உள்ளார். இன்று ஒருநாள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
ஷின்ஜோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். என் அன்பு நண்பரை இழந்துவிட்டேன் என அவர் கூறி உள்ளார். இன்று ஒருநாள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார்.
அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
என் அன்பு நண்பர்களில் ஒருவரான ஷின்ஜோ அபேயின் சோகமான மறைவால் நான் வார்த்தைக்கு வராத அளவில் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன். அவர் சிறந்ததொரு உலகளாவிய அரசியல்வாதி, மிகச்சிறந்த தலைவர், குறிப்பிடத்தக்க நிர்வாகி ஆவார். அவர் ஜப்பானையும், உலகையும் சிறந்த இடமாக மாற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
எனக்கும் அவருக்குமான தொடர்பு பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோதே அவரை அறிவேன். நான் பிரதமர் ஆன பிறகு எங்கள் உறவு தொடர்ந்தது. பொருளாதாரம் மற்றும் உலக விவகாரங்களில் அவரது ஆழ்ந்த பார்வைகள், என்னை எப்போதும் பெரிதாக ஈர்த்தன.
சமீபத்தில் நான் ஜப்பான் சென்றிருந்தபோது, அவரை சந்திக்கவும், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது எங்களது கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் எப்போதும் அறிவாற்றலுடனும், உள்ளார்ந்த பார்வை கொண்டவராகவும் இருந்தார். அவருடைய குடும்பத்தினருக்கும், ஜப்பானிய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இந்திய-ஜப்பான் உறவை சிறப்பான பாதுகாப்பு உறவு மற்றும் உலகளாவிய கூட்டு என்ற அளவுக்கு உயர்த்தியதில் அபேயின் பங்களிப்பு மகத்தானது. இன்றைக்கு ஜப்பானுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் அவரது மறைவால் துக்கம் கடைபிடிக்கிறது. இந்த கடினமான தருணத்தில் ஜப்பானிய சகோதர, சகோதரிகளுடன் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது.
அவருக்கு நமது மரியாதையை தெரிவிக்கிற வகையில் நாளை (இன்று) ஒரு நாள் தேசிய துக்கம் கடைபிடிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.
ஷின்ஜோ அபேயை கடைசியாக சந்தித்தபோது எடுத்துக்கொண்ட படத்தையும் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.
இன்று ஒருநாள் தேசிய துக்கம் கடைபிடிக்கப்படுவதால், தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.