தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத ஷாரிக்; செல்போன் பயிற்சி மைய தலைவர் தகவல்

பயங்கரவாதி ஷாரிக் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருந்ததாகவும், 10 செல்போன்களை அவர் வைத்திருந்ததாகவும் செல்போன் பயிற்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-22 21:56 GMT

மைசூரு:

போலி ஆதார் கார்டு

மைசூரு டி.பனமய்யா சாலையில் உள்ள எஸ்.எம்.எம். செல்போன் பயிற்சி மையத்தில் சேர்ந்து செல்போனை தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சியை கற்றுள்ளார். இதுதொடர்பாக அந்த பயிற்சி மையத்தின் தலைவர் பிரசாத் கூறியதாவது:-

ஷாரிக், எங்கள் மையத்தில் பயிற்சிக்காக சேரும் போது ரெயில்வே ஊழியரான பிரேம்ராஜ் ஹிடாகி பெயரிலான ஆதார் அட்டையை கொடுத்திருந்தார். அதில் பிரேம் ராஜ் படத்திற்கு பதிலாக ஷாரிக்கின் படத்தை மாற்றி கொடுத்து இருப்பது தற்போது தான் தெரியவந்தது. அவர் கொடுத்த ஆதார் கார்டு மூலம் நான் உப்பள்ளியை சேர்ந்த பிரேம் ராஜ் தான் என கருதி அவருக்கு பயிற்சி அளிக்க அனுமதி வழங்கினோம்.

சரிவர பயிற்சிக்கு வரவில்லை

அவர் தான் கால் சென்டரில் தனக்கு வேலை கிடைத்து இருப்பதாகவும், 15 நாட்களுக்கு பிறகு பணியில் சேர வேண்டும் என்றும் கூறினான். அதுவரை வீட்டில் சும்மா இருக்க வேண்டும் என்பதால் செல்போன் பயிற்சி பெற விரும்புவதாக ஷாரிக் கூறி எங்களிடம் பயிற்சிக்கு சேர்ந்தார்.

ஆனால் அவர் சரிவர பயிற்சிக்கு வரவில்லை. 45 நாட்கள் பயிற்சி வகுப்பில் அவர் சுமார் 10 நாட்கள் மட்டுமே பங்கேற்றுள்ளார். அவர் கொடுத்த செல்போன் எண்ணை நாங்கள் தொடர்பு கொண்டு பயிற்சிக்கு வராதது பற்றி கேட்க முயற்சித்த போது தமிழில் பல நேரங்களில் செல்போன் அறிவிப்புகள் வரும். அதுபற்றி அவரிடம் கேட்டால் எனது நண்பர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களை பார்க்க வந்திருப்பதாக கூறியுள்ளார்.

'வாட்ஸ்-அப்'பில் சிவன் படம்

அதுபோல் கேரள பதிவெண்ணுடன் கூடிய மோட்டார் சைக்கிள் படத்தை அவர் தனது செல்போன் ஸ்டேட்டடிசில் போட்டிருந்தார். அதுபற்றி கேட்டதற்கு, அது கேரளாவை சேர்ந்த தனது நண்பர் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி இருப்பதாக கூறினார்.

மேலும் அவர் தனது செல்போன் 'வாட்ஸ்-அப் டி.பி.'யில் ஆதியோகி சிவன் படத்தை வைத்திருந்தார். அத்துடன் ஷாரிக் தார்வார் பகுதியில் பேசப்படும் கன்னட மொழியை தெளிவாக பேசினார். அவர் தனது அடையாளத்தை ஒரு துளி கூட வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர் மீது எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் எழவில்லை.

செல்போன் பயிற்சிக்காக 10 செல்போன்களை ஷாரிக் வாங்கியிருந்தார். மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த அன்று இரவே எங்களை போலீசார் தொடர்புகொண்டு பேசினர். நான் ஷாரிக் பற்றி எனக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் கூறியுள்ளேன். என்னை சில நாட்களுக்கு வெளிமாவட்டத்திற்கு செல்லக் கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி மைசூருவிலேயே இருந்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்