பாலியல் புகார் - பிரிஜ் பூஷன் வீட்டில் டெல்லி காவல்துறை விசாரணை

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-06 05:29 GMT

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதற்கிடையே ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்- வீராங்கனைகள் அறிவித்தனர். பின்னர் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிடில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என மல்யுத்த வீரர்கள்- வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். நேற்றுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், நேற்று நள்ளிரவு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா சாக்சி மாலிக், சங்கிதா போகத், சத்யவார்ட் கடியன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்தினர். அதற்கு அமித் ஷா, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷன் வீட்டில் இல்லாத நிலையில் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக உ.பி.யின் கோண்டாவில் உள்ள அவரது வீட்டில் இருந்த ஊழியர்கள் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் புகாரில் இதுவரை சிறப்பு புலனாய்வு குழு மொத்தம் 137 பேர் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்